Friday, October 18, 2013

வாராது வரும் ஐசான் வால் நட்சத்திரம்!

முனைவர் ப. குமாரசாமி, 
விலங்கியல் துறை பேராசிரியர், 
அமெரிக்கன் கல்லூரி, மதுரை-2

 Comet எனும் சொல் லத்தீன் மொழியில் Cometa வார்த்தையிலிருந்து வந்தது இதற்கு " நீண்ட முடி" என்று அர்த்தமாகும். Comet என்பதன் பொருள் " நீண்ட முடி நட்சத்திரம் " என்பதாகும். தலைவிரி கோலத்திலிருக்கும் ஒரு பெண்ணின் முகத்தைப் போல!

வால் நட்சத்திரம் என்றால் என்ன?
வால் நட்சத்திரம் இரு பகுதிகளால் ஆனது. வெளிப்புறத்தில் தூசி நிறைந்த ஒரு பனிபடர்ந்த ஒரு படலம் மற்றும் நடுவில் அதாவது மையப்பகுதியில் கடின பாறையால் ஆன Core அல்லது Nucleus உள்ளது. எனவே பெரும்பாலும் வால் நட்சத்திரங்கள் ' அழுக்கு பனி பந்துகள் ' என்றே கருதப்படுகின்றன.

வால் நட்சத்திரங்கள் கடினமான மைய பகுதி பாறையால் ஆனது. அதன் மேற்பரப்பு தூசி , பனித்துகள்கள், உறைந்த கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு , மீத்தேன் , அம்மோனியா போன்ற வாயுக்கள் ஆகியவைகளால் மூடப்பட்டுள்ளது.

வால் நட்சத்திரங்கள் சூரியன் அருகே வரும்போது, சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தினால், வால் நட்சத்திர மேற்பரப்பிலுள்ள உறைந்த நீர் மற்றும் வாயுக்கள் ஆவியாகி மையத்திலிருந்து துகள்களாக நீண்ட தூரத்திற்கு சிதற அடிக்கப்பட்டு ஒரு வால் போன்ற அமைப்பு உருவாகும் ,
வால் நட்சத்திரங்கள் சூரியனை அனுகும் போது மட்டுமே வால் உருவாகிறது.


வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகாமையிலிருக்கும் போது வாலின் நீளம் மிக அதிகமாகவும், சூரியனை விட்டு தொலைவில் செல்லச் செல்ல வாலின் அளவு குறைந்து இறுதியில் வால் இல்லாமலும் ஆகிவிடும்.

ஒரு வால் நட்சத்திரம் சூரியனுக்கு நெருக்கமாக வரும் ஒவ்வொரு முறையும் அதன் எடையில் ஒரு பகுதியை இழக்கின்றது.

வால் நட்சத்திரங்கள் கிரகங்கள் தோன்றிய போது உருவானவை.

நாம் காணும் அனைத்து வால்நட்சத்திரங்களும் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தவை . 

வால் நட்சத்திரங்கள் ஒளி உமிழுமா? 

வால் நட்சத்திரங்கள் மற்ற நட்சத்திரங்கள் போல சுயமாக மீது ஒளி வீசுவதில்லை. ஆனால் சூரியனின் ஒளியை பிரதிபலிக்கிறது. எனவே வால் நட்சத்திரங்களின் பிரகாசம் அவை சூரியனை அணுக அணூக கூடி, பின் சூரியனை விட்டு விலக விலக மங்கலாகிறது.  

வால் நட்சத்திரங்கள் இரு வகைப்படும்: 

1.  குறிப்பிட்ட கால அளவில் சூரியனை சுற்றும் வால் நட்சத்திரங்கள் – Periodic Comets 

2. சூரியனைச் சுற்றா வால் நட்சத்திரங்கள் – Non-periodic Comets.

சூரியனை சுற்றும் வால் நட்சத்திரங்கள் பொதுவாக 200 ஆண்டுகளுக்கும் குறைவான கால அளவில், சூரியனை ஒரு முறை ஒரு நீள் வட்ட பாதையில் சுற்றும்.

எடுத்துக்காட்டாக ஹாலி வால் நட்சத்திரம் (Halley’s Comet) 76 ஆண்டுகளில் ஒரு சுழற்சியை நிறைவு செய்கின்றது. 

இது போன்ற வால் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து சுமார் 50 வானியல் அலகுகள் (Astronomical Unit - AU) தொலைவில், நெப்டியூன் கிரகப்பாதையிலிருந்து புளூட்டோவின் பாதையைத் தாண்டிய அந்த இடைப்பட்ட பகுதியில், அதாவது “குயிர்பெர் மண்டலம்” (Kuiper Belt) ' என அழைக்கப்படும் பகுதியிலிருந்து தோன்றுகிறது. [AU என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தைக் குறிக்கும். இதன் அளவு 14 கோடியே 95 லட்சத்து 97 ஆயிரத்து 870 கிமீ ஆகும்].  


சூரியனைச் சுற்றா வால் நட்சத்திரங்கள், சூரியனிலிருந்து 50,000 AU தொலைவில் [ஏறத்தாள ஒரு ஒளியாண்டு தூரம்] அமைந்துள்ள ' ஊர்ட் மேகம் ' (Oort Cloud) என்ற பகுதியிலிருந்து தோன்றுகிறது.இந்த பகுதி தான் நமது சூரிய குடும்பத்தின் எல்லை.  


 ஐசான் வால் நட்சத்திரத்தின் அரிய வருகை 


வால் நட்சத்திரம் ஐசான் (ISON) ஒரு சூரியனைச் சுற்றா வால் நட்சத்திரம். இந்த வால் நட்சத்திரம் 2012 செப்டம்பர் 21 இல் , கண்டுபிடிக்கப்பட்டது . இந்த வால் நட்சத்திரம் ஊர்ட் மேகம் சுற்றுப்பாதை பாதையில் இருந்து தப்பி முதல் முறையாக சூரியன் அருகே வருகிறது. 

இது 28 நவம்பர் 2013 இல் சூரியனக்கு மிக நெருக்கமாக வந்து திருப்பிச்செல்லும். 
மீண்டும் அது நமது சூரிய குடும்பத்திற்கு வராது ! எனவே இந்த நிகழ்வு ' வாழ்க்கையில் ஒரு முறை’ மட்டுமே நடைபெறப்போகும் நிகழ்வாக அமையப்போகிறது.

ஐசான் (ISON) வால் நட்சத்திரத்தின் பிற பெயர்கள்: 

C/2012 S1 அல்லது 
Nevski – Novichonok வால் நட்சத்திரம் 

இந்த வால் நட்சத்திரம் சர்வதேச அறிவியல் ஆப்டிகல் நெட்வொர்க் (International Scientific Optical Network - ISON ) அமைப்பினால் ஒரு 16 அங்குல தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததிலிருந்து செப்டம்பர் 21 , 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டது . அந்த சமயத்தில் ஐசான் பூமியிலிருந்டு 6.29 AU தொலைவில் இருந்தது. இதனால் இதற்கு ஐசான் எனப்பெயர் வந்தது.

C/2012 S1 என பெயர் வர காரணம்: 

இப்பெயர் சர்வதேச வானியல் கூட்டமைப்பினால் (International Astronomical Union) கொடுக்கப்பட்ட பெயர்.  “C” எனும் எழுத்து “சூரியனைச் சுற்றா வால் நட்சத்திரங்கள்” என்பதனைக் குறிக்கும்.
"S1" எனும் எழுத்து செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது பாதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் வால் நட்சத்திரம் என்றும், 
மற்றும் இது 2012 இல் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் பொருள்படுகிறது. 

நெவ்ஸ்கி- நொவிகோனோக் வால் நட்சத்திரம் 
நெவ்ஸ்கி (Vitali Nevski) மற்றும் நொவிகோனோக் (Artyom Novichonok) ஆகிய இரு ஆராய்ச்சியாளர்கள் அவர்கள் ரஷ்யாவில் உள்ள சர்வதேச அறிவியல் ஆப்டிகல் நெட்வொர்க் (International Scientific Optical Network - ISON ) அமைப்பின் 16 அங்குல தொலைநோக்கியைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட படங்களை, கோலிடெக் (CoLiTec) எனும் ‘மென்பொருள்’ மூலம் ஆராய்ந்து இந்த வால் நட்சத்திரத்தை கண்டறிந்தனர். 

ஐசான் எவ்வளவு பெரியது? 

இந்த வால் நட்சத்திரம் 5 கிலோமீட்டருக்கும் சற்று குறைவாக விட்டம், மற்றும் 3.2 பில்லியன் கிலோ (3.2 கோடி கிலோ) முதல் 3.2 டிரில்லியன் கிலோ வரை எடையுள்ளதாகவும், ஒரு ஒழுங்கற்ற வடிவ வால் நட்சத்திரமாக உள்ளது என்றும் கண்டறிந்துள்ளனர். 

ஐசான் எவ்வளவு வேகத்தில் பயணிக்கிறது? 

அதன் வேகம் சூரியனிலிருந்து தொலைவில் இருக்கும் போது சராசரியாக மணிக்கு 125,000 கி.மீ ஆக இருக்கும். அது சூரியன் அருகில் வருகையில் வேகம் மணிக்கு 1,352,000 கி.மீ ஆக இருக்கும்! 

ஐசான் வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை 

வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையின் அமைப்பு வட்டமாக இல்லாமல் ஒரு மிக அதிக நீள்வட்ட பாதையாக உள்ளது, அதாவது ஒரு சமதள கோட்டைப் போல! 

மேலும் ஐசான் வால் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை, பூமியின் சுற்றுப்பாதை பாதையைவிட 62,39 டிகிரி சாய்வாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

சூரியனை நெருங்கும் ஐசான்: 

ஐசான் வால் நட்சத்திரம் சூரியனுக்கு மிக அருகில் நவம்பர் 28, 2013 தேதியன்று வருகிறது. அந்த நாளில் ஐசான் 1.860.000 கிமீ (அதாவது 0,0124 AU மட்டுமே) தூரத்தில் இருக்கும். இதனால் ஐசான் வால் நட்சத்திரத்தை ' “சூரியனை மேயும் (Sungrazing) வால் நட்சத்திரம்’ என்று கருதுகிறார்கள்.  
பூமியுடனான சந்திப்பு: 

26ம் தேதி டிசம்பரில் ஐசான் வால் நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 64,210,000 கிமீ (அதாவது 0.4292 AU) தூரத்தில் கடக்கிறது. இதுவே இவை இரண்டிற்குமான குறைந்தபட்ச இடைவெளி. 

ஐசான் வால் நட்சத்திரத்தை எப்போது காணலாம்? 

ஐசான் செல்லும் பாதை

அக்டோபர் : 
அக் 19-31 தேதிகளில் அதிகாலை 04:40 மணியளவில் கிழக்கே சிம்ம ராசியின் பிரகாசமான நட்சத்திரமான் மகம் (Regulus) அருகே ஐசான் வால் நட்சத்திரம் கடந்து செல்கிறது அப்போது அதனருகே செவ்வாய் கிரகத்தையும் காணலாம். இச்சமயம் தொலை நோக்கியின் உதவியுடன் மட்டுமே பார்க்க இயலும். 

நவம்பர்: 
நவம்பர் 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ஐசான் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்கமுடியும். அப்போது அது கன்னி ராசியின் பிரகாசமான நட்சத்திரமான சித்திரை (Spica) அருகிலிருக்கும். 
நவம்பர் 24ஆம் தேதி முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை ஐசான் வால் நட்சத்திரத்தை பார்க்கமுடியாது, ஏனெனில் அது சூரியனுக்கு அருகாமையில் சென்றுவிடுகிறது. 

டிசம்பர்:
மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் அடுத்த வருடம் ஜனவர் 10ஆம் தேதி வரை ஐசான் வால் நட்சத்திரத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும். 

டிசம்பர் முற்பகுதியில் இது துலாம் மற்றும் ஒபியுக்கஸ் (Ophiuchus) நட்சத்திர மண்டலம் இடையே இருக்கும். 
22 டிசம்பரில் ஹெர்குலஸ் நட்சத்திர மண்டலம் அருகே இருக்கும் . 
25 டிசம்பர் அது, சப்தரிஷி மண்டலம் (Ursa Major) அருகே இருக்கும். 
 டிசம்பர் இறுதியில் வால் நட்சத்திரம் டிராகோ நட்சத்திர மண்டலம் (Draco) அருகே இருக்கும். இது சமயம், ஐசான் வால் நட்சத்திரம் கிழக்கிலிருந்து வடக்கு திசை நோக்கி நகர்ந்து செல்கிறது. 

ஜனவரி 2014: 
7 முதல் 10 ஜனவரி வரை ஐசான் வால் நட்சத்திரம் வடக்கே துருவ நட்சத்திரம் அருகே காணப்படும். 
ஜனவரி 10ஆம் தேதி தான் இதனைக் கடைசியாக வெறும் கண்ணால் பார்க்க முடியும். 

ஐசான் வால் நட்சத்திரம் பற்றிய செய்தித் துளிகள்:
 • ஐசான் வால் நட்சத்திரம் ஊர்ட் மேகம் பகுதியிலிருந்து முதல் முறையாக சூரியனை நோக்கி வரும் ஒரு வால் நட்சத்திரம்.. 
• ஐசான் வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி தனது முதல் ம்ற்றும் கடைசி பயணத்தை செய்கிறது , ஆகவே இதனைக் காண்பது ஒரு தனித்துவம் வாய்ந்தது! 
• ஐசான் வால் நட்சத்திரத்தில் இன்னும் அப்படியே அதன் சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட பண்டைய இரசாயனங்கள் உறைந்து கிடக்கிறது.. இதனை ஆய்வு செய்தால் சூரிய தோற்றம் மற்றும் புவியில் உயிர்களின் தோற்றம் பற்றிய உண்மைகள் தெரியவரும். . 
• இது வரலாற்றில் பிரகாசமான வால் நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்கும். எனவே ஐசான் இந்த " நூற்றாண்டின் வால் நட்சத்திரம் " என அழைக்கப்படுகிறது. 
• ஐசான் வால் நட்சத்திரம் 6-11-2013 முதல் 23-11-2013 வரையும் பின் 13-12-2013 முதல் 10-01-2014 வரையும் வெறும் கண்ணுக்கு புலப்படும். 
• ஜனவரி 14 - 15 இடையே ஐசான் பூமியைக் கடந்து சென்றபின் அதன் சுற்றுப்பாதையின் வழியாக பூமி கடந்து செல்லும். இந்த நேரத்தில் , வால் நட்சத்திரம் இருந்து வெளிப்பட்ட தூசு, துகள்கள் பூமியில் விண்கற்கள் பொழிவு மற்றும் இரவில் ஒளிரும் படலத்தையும் ஏற்படுத்தலாம் . 
• ஐசான் வால் நட்சத்திரத்திலிருந்து தோன்றும் வாலில் ஒரு நாளில் சுமார் 1 மில்லியன் கிலோகிராம் பனியாக உறைந்த கார்பன் டை ஆக்சைடு வாயு, 54.4 மில்லியன் கிலோகிராம் தூசி மற்றும் 86400 கிலோகிராம் தண்ணீர் வெளியேறுகிறது. • ஐசான் வாலிலிருந்து வெளியேறும் தூசியினால் அது தன் எடையில் 10% இழக்கிறது! . 
• ஐசானின் வால் அதிகபட்ச நீளம் சுமார் 300,000 கிலோமீட்டர் (186,400 மைல்), இது பூமியின் சுற்றளவை விட நான்கு மடங்கு அதிகம்!. 
• ஐசான் சூரியனை நெருங்கும் போது எதுவு நடக்கலாம்! தன் கடின பாறைப்பகுதி பிளவுபடலாம், அல்லது முற்றிலும் சிதையலாம் அல்லது அப்படியே இருக்கலாம். என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் ! 
• ஐசானைபற்றி ஆராய அமெரிக்கவின் நாசா அமைப்பு ஒரு ராட்சத பலூனை அனுப்புகிறது அதன் பெயர் பிரைசான் (BRRISON). 
• உலக நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டு முயற்சியின் விளைவு “ஐசானைப் பற்றிய உலகளாவிய கண்காணிப்பு பிரச்சாரம்” [Comet ISON Observing Campaign (CIOC)] எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, பூமி மற்றும் விண்வெளியிலிருந்து ஐசானை கண்காணித்தும் ஆராய்ந்தும் வருகிறது., நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி , சோலார் மற்றும் கதிர் மண்டலம் செயர்கைக்கோள் (SOHO), சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம், முப்பரிமான ஆய்வுகள் செய்ய, படமெடுக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. 
• மனித வரலாற்றிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகத்தில் இருந்து ஆராயப்படும் முதல் வால் நட்சத்திரம் என்ற பெருமையை ஐசான் தட்டிச்செல்கின்றது! பூமி மற்றும் செவ்வாய் கிரகங்களிலிருந்து ஐசான் ஆராயப்படுகிறது! 
• ஐசான் அக்டோபர் 1, 2013 இல், செவ்வய் கிரகத்தை 0.072 AU தூரத்தில் நெருங்கிய போது செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் மூன்றிற்கும் மேற்பட்ட விண்கலங்கள் ஐசானை புகைப்படங்கள் எடுத்தனுப்பியது.


ஐசான் 1-10-2012ல் எடுக்கப்பட்டது


8-10-2013ல் எடுக்கப்பட்ட ஐசான்



செவ்வாய் கிரகத்தைச் சுற்றும் விண்கலத்திலிருந்து ஐசான்

No comments:

Post a Comment